September 05, 2009

புதிய வலை முகவரி...

நண்பர்களே...

எனது புதிய வலை முகவரி

http://roudran4.blogspot.com/

March 15, 2009

ஆதி பறவை...


டிரிக்கரிலிருந்து விடுபடும் ரவை
உரசிச்செல்லும் வண்ணத்துபூச்சிகளின்
சிறகுகளில் வழிகின்றன
பெருங்காட்டின் பச்சையம்
அடர் மழைக்கு கூடொடுங்கிய
ஆதி பறவையின் கண்களில்
பொதிந்திருக்கிறது நீலம்
முனை முறிந்த பேனா
வீழும் செந்நதியில்
நீராடி கரையேறுகிறான் ரிஷி
கிளையொன்றில் தொங்குது
வன தேவதையின் சடலம்...

March 12, 2009

நீல வெயில்...


கிளையில் ஊர்ந்த கூட்டுப்புழு
சட்டென பறந்தது தும்பியாகி
மௌனமாகி விட்டன
விட்டுச்சென்ற அதன் வண்ணங்களும்
கிளை பூ வாசனையும்...

உரசாமல் செல்லும் சருகுகளை
இலைகளை மீன்களை
சலனமற்று பார்க்கிறது
நதியில் மிதக்கும் நிலா
மேலும்,
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...

சுவர் மோதி மீளும்
உன் சொல் கரையும் வெளியில்
உடைமாற்ற காத்திருக்கிறதென்
கவிதை...

வேரறுந்து மேலெழும்
தாவரத்தையொத்து
நானொரு முத்தமாகிறேன்,
கொத்த காத்திருக்கும்
உன் கூரலகு இடைவெளியில்
மீன்களாகிறது என் கண்கள்...

இப்படியாக,
நேற்றிரவு
ஒரு நீல வெயில்
எனை நனைத்து சென்றது...

February 26, 2009

Latcho Drom(ஜிப்ஸியின் பயணம்)


இணையத்தில் எதையோ தேடப்போய் எதேச்சையாக கண்ணில் சிக்கியது இப்படம்.

என் ஊர் இஸ்லாமியர்கள் நிறைந்த கிராமம்(50/50).சிறுவயதில் தாத்தா என்னை அதிகாலையிலேயே எழுப்பி கலப்பு கடைக்கு(டீ கடை) அழைத்துச் செல்வார்.நோன்பு காலங்களில் பள்ளிவாசல் ஒலி பெறுக்கியிலிருந்து "அல்லாஹீ..அக்பர் அல்லா.."என்ற வசீகரமான தொழுகை ஒலிக்கும்.பிறகு சிறுவர்களின் "ஹத்தே ஹத்தே சல் அல்லா.." என்ற பாடல்.."லாஹி லாஹா.."என்ற வரிக்கடுத்த இடைவெளி எனக்கு மிகவும் பிடிக்கும்."லாஹி லாஹா இல் அல்லா...."என்று முடிப்பார்கள்.

சற்று நேரத்திற்கெல்லாம் பெருமாள் கோவில் ஒலி பெறுக்கிகளில் பஜனை பாடல்கள் கேட்க தொடங்கும்.மேலும் பெருமாள் கோவிலை சுற்றி நிறைய இசை வேளாளர்கள் நிறைந்திருந்தனர்.ஆதலால் காலை வேளைகளில் தெருவின் பெரும்பாலான வீடுகளில்,யாராவது யாருக்காவது நாதஸ்வரம்,மேளம் போன்றவற்றை கற்றுத்தந்த படியோ,பயிற்சி செய்தபடியோ இருப்பார்கள்.

சாலையோரம் சிறிய கூடாரம் அடித்து தங்கியிருக்கும் நாடோடிகளை
அவ்வப்போது காண நேர்வதுண்டு.சிறுவயதில் இவர்களது நோஞ்சான் குதிரையை வேடிக்கை பார்க்க செல்வோம்.அவர்கள் வீடு வீடாக சென்று,பழைய ஓட்டை பாத்திரங்களை வாங்கி வந்து ஈயம் பூசி தருவர்.

பேரூந்து நிலையங்களில் "ஏ..சைடூஸ்,ஈருளி(பேன் வகையறாக்களை ஈத்தி நசுக்க பயன்படும் மரத்தாலான் சீப்பு),ஊக்கு,மணிமாலை" என்று கைவினைப் பொருட்களோடு கூவும் நரிக்குறவர்கள்,களிமண்ணாலான பூ ஜாடிகள் மற்றும் அழகிய சிலைகள் விற்கும் தெருவோர மனிதர்களை காண்கிறோம்.

யார் இவர்கள்? எப்பொழுது இவர்கள் நாடோடிகளாக மாறிப் போனார்கள்?இவர்களுக்கு ரேஷன் கார்டு,அடையாள அட்டைகள் உண்டா?உயிர்மையில் முன்பு "ஜிப்சியின் துயர நடனம்" என்ற எஸ்.ரா வின் கட்டுரையை வாசித்ததுண்டு.உலகம் முழுவதும் உள்ள ஜிப்சிகள் என்றழைக்கப்படும் இவர்களது இசை,நடனம் மற்றும் பயணம் குறித்த ஆவணப்பதிவே இப்படம்.

ராஜஸ்தானிலுள்ள நாடோடிகளிலிருந்து தொடங்குகிறது படம்.வறண்ட நிலப்பரப்பினூடாக,மாட்டு வண்டிகள்,கழுதைகள் சகிதம் பயணிக்கும் சிறுகுழு.ஒரு சிறுவன் நாட்டுப்புற பாடலொன்றை பாடியபடியே வருகிறான்.நீர் நிலையற்ற அவ்வெளியில் குழந்தைகள் தாகத்தால் சுருண்டு கழுதையின் மீது கவிழ்ந்தபடி பயணிக்கின்றன.

அக்குழு ஒரு கிராமத்தை அடைந்து தத்தமது வேலைகளில் ஈடுபடுகின்றனர்.பெண்கள் சம்மட்டி அடிக்க,பழுக்க காய்ச்சிய இரும்பை கருவிகளாக வார்க்கின்றனர்.வேலைகளின் இடையே ஒரு சிறுமி நடனமாடுகிறாள்.சிறுவன் பாடுகிறான்.குழுவில் உள்ள இளம் பெண்ணொருத்தி ஆடும் நடனம் ஆகா..குரு படத்தில் ஐஸ்வர்யா ராய் ஆடுவாரே.அதெல்லாம் இங்கிருந்து வந்ததுதான் போலும்.தலையை வான் நோக்கியபடி,உடலை வில் போல் வளைத்து ராட்டினமாய் சுழல்கிறாள்..

மாலை வேளையில் மரமொன்றில் தீ தருவித்து வழிபடுகின்றனர்.இரவில் களைகட்டுகிறது பாடல் கச்சேரி.இவர்களது உடைகள்,அணிகலன்கள் புராதனமாயும் வசீகரமாயும் உள்ளன.இவர்கள் பயன்படுத்தும் பல்வேறு இசைக்கருவிகளின் பெயர்கள் தெரியவில்லை.பெரும்பாலும் மண்கல,கம்பியிழை,உலோக வாத்தியக்கருவிகள்.பெண்கள் குழுவாக அமர்ந்து,சிஞ்சான் போன்ற கருவி கொண்டு,கைகளை உயர்த்தியும், சுழற்றியும் பாடும பாடல் அற்புதம்.
அடுத்தது எகிப்திய ஜிப்ஸிகளின் இசை. தனித்த மண்டபமொன்றில் நீண்ட மரப்பலகையின் மீதாக பாதங்களால் சப்தமெழுப்பியபடி ஆடி,பாடுகிறார்கள்.நீண்ட அங்கி போன்ற உடைகள்,இசை,நடனமென தனித்துவமாயிருக்கிறது இவர்கள் நாகரீகம்.இடுப்பை அனாயசமாக அசைத்து,பாதங்களால் எழுப்பும் சப்த தாளமும் தப்பாமல்,இப்பெண்கள் ஆடும் நடனம் அருமை.சல்சா நடனம் இங்கிருந்து வந்திருக்கக் கூடும்.இவர்களது இசையும், பாடலும் அரேபிய இசையை ஒத்திருக்கின்றன.

துருக்கி ஜிப்சிகள் மலர்கள்,கொத்து மிள்காய் மாலை போன்றவற்றை தெருவில் கூவி விற்கின்றனர்.இவர்களுடையது trumput போன்ற ஊதுகுழல் கருவிகள் மற்றும் தப்ஸ் தோல்வாத்தியக் கருவிகள்.உணவு விடுதிகளில் இசைத்தும்,தெருவில் கரடி வித்தைகள் காட்டியும் பிழைக்கின்றனர்.

ஒவ்வொரு நிலப்பரப்பிலும் நிலவு,சூரியன்,பறவைகள் போன்றவை நாங்கள் தேசமற்றவர்கள் என்பது போல் பதிவாகியுள்ளன.ரோமானிய,ஹங்கேரி மற்றும் ப்ரான்ஸ் தேச நாடோடிகளின் அழகிய இசை மற்றும் நடனங்களோடு நகர்கிறது ஆவணம்.

ஜிப்சிகளின் பாடலில்,நடனத்தில் ஒருங்கே ஒளிந்திருக்கும் பரவசங்களும் நூற்றாண்டு துயரமும்,ஏதிலிகளான பயணமும் சொற்களற்ற....

பனிமலைகள் சூழ்ந்த பிராந்தியத்தில்,நீரற்ற வெளிகளில் என பயணித்தபடியே இருக்கிறது இவர்களது வாழ்வு.ஆயிரம் பேர் கூடும் சபா கச்சேரிகளில்,மேடைப்பாடல்களில் இல்லாத உயிர்த்தன்மை,இந்த எளிய மக்களின் பாடல்களில் விரவிக்கிடக்கின்றன.

கணிணியும்,இணையமும் உலகை ஒரு பொறி உருண்டையாக தோற்றம் கொள்ள செய்கிறது.ஆனால் ஜிப்சிகளுக்கு நடந்து தீராத நிலப்பரப்பாக விரிந்து கிடக்கிறது பூமி.

நாகரீகம் (?) எத்தனையோ மொழிகளை,கலைகளை,வாழ்வு முறைகளை அழித்துவிட்டது.இசையும்,நடனமும்,இலக்கியமுமாய் பரிணமிக்கும் மனித மனம்,குரோதமும் கொள்கிறது..போர் தொடுக்கிறது,சக மனிதனை கொன்றொழிக்கிறது...என்ன ஜென்மமோ போ.